Wednesday, December 1, 2021

Day 7: உன் பாட்டு என் வார்த்தை: பிரதிபலிப்புகள்

உன் பாட்டு என் வார்த்தை: பிரதிபலிப்புகள்

-- நிரூபினி முரளிதரன்

எப்பொழுதும் இசை நம்மை மயக்குகிறது, தாளம் போடவைக்கிறது, மொழியை தாண்டி சொக்க வைக்கிறது. மெய்மறந்து பாடல்களை முணுமுணுப்பது நமது இயல்பு. இந்த  பாடல் வரிகளின் அர்த்தங்கள் நமக்கு என்ன கூறுகின்றன? அது எதை பிரதிபலிக்கிறது? என்ன தாக்கங்களை ஏற்படுத்துகிறது?

 1990களில் நாம் முணுமுணுத்த பாடல்கள் நிறைய உள்ளன.  ‘செந்தமிழ் நாட்டுத் தமிழச்சியே, சேலை உடுத்த தயங்குறியே.... கணவன் மட்டும் காணும் அழகை கடைகள் போட்டு காட்டுறியே”;  “இஞ்சிஇடுப்பு அழகி”;  “அன்பே அன்பே கொல்லாதே.... பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்,அடடா பிரம்மன் கஞ்சனடி! சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன், ஆஹா அவனே வள்ளலடி!” போன்ற பாடல்களை முணுமுமுணுக்காதவரே இல்லை எனலாம்.

அது மட்டுமா! 20களில் “கிளப்ல மப்ள திரியிர பொண்ணுங்க…. இவளுங்க இம்சை தாங்க முடியலை, இவளுங்க இளமையும் தூங்க முடியலை”; “பிட்டு படம் நீ, தலுக்கா வந்து சிலுக்கா மாட்டிக்கிட்டா”;  “அடிடா அவள, உதைடா அவள, குத்துடா அவள, வெட்டுடா அவள” போன்ற பாடல் வரிகளை நமது இன்றைய இளைய சமுதாயம் முணுமுணுத்து கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் சிந்தித்து பார்த்தால், இந்த பாடல் வரிகளின் உள்ளார்ந்த அர்த்தம் என்ன என்பதை நம்மால் உணர முடியும்.

அவ்வாறு சிந்தித்து பார்த்தால், இந்த வரிகள் பெண்களை இழிவுப்படுத்துவது மட்டுமல்லாமல், பெண்களை மீதான  பாலியல் துன்புறுத்துதலை இயல்பாக்குகிறோம். நமது இளைய சமுதாயத்தினருக்கு, இது ஒரு இயல்பான, சமூக வழக்கத்திற்குட்பட்ட நடைமுறையாக உணர்த்துகிறோம். அதனால் பெண்கள் மீதான அடக்குமுறையும், பாலின கண்ணோட்டங்களும் இன்னும் வலுப்பெருமே அன்றி, சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவது கடினமானதொரு விஷயமாக உருமாற வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

இந்த வகையான பொழுதுபோக்கு, விஷப்போக்கே ஆகும். ஆகையால் பெண்களை போகப் பொருளாய் அன்றி, அவர்களை சக மனிதர்களாய், சமமான வாய்ப்புகளும், சமமான அதிகாரம் கொண்டவராய், உணர்த்தும் பாடல் வரிகளை, மேற்சொன்ன பாடல் வரிகளுக்கு பதிலாய் (remix) எழுத நினைத்தோம்

அக்ஷராவின் கானா ரீரைட் மூலம் ஈர்க்கப்பட்டு,  இந்த ஆண்டு 2021 பிரக்ஞா 16 நாட்கள் பாலின வன்முறை பிரச்சாரத்திற்காக, "உன் பாடல், என் வார்த்தைகள்" என்ற நிகழ்வை பிரக்ஞா வடிவமைத்துள்ளது

தமிழ்த் திரையுலகின் கவர்ச்சியான பாடல்கள், பெண்களை புறந்தள்ளும், மதிப்பிழக்கச் செய்யும் மற்றும் அவமரியாதை செய்யும் பெண் வெறுப்பு வரிகளைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. பிரக்ஞாவின் 2021 பாலின வன்முறை பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, இத்தகைய பெண்வெறுப்பு மற்றும் அவர்கள் மீதான வன்முறையை தூண்டும்  பாடல் வரிகளை பெண்மையை மதிக்கும், அங்கீகரிக்கும் வரிகளாக மாற்றி  எழுதும் முயற்சியை முன்னெடுத்துள்ளோம்.

இவ்வாறான பாடல்களில் உங்கள் வரிகளை மாற்றி எழுதி எங்களுக்கு அனுப்புங்கள், மாற்றத்துக்கு வித்திடுங்கள்.


x

No comments:

Post a Comment