Thursday, December 10, 2020

பாலியல், சாத்திய வன்முறை - இறுகிய பிணைப்பு : கருத்துரை பற்றிய எனது பார்வை

பாலியல், சாத்திய வன்முறை - இறுகிய பிணைப்பு :
கருத்துரை பற்றிய எனது பார்வை

-- சுடரொளி


சாதியும், பாலிய வன்முறையும் - இது ஒரு பரவலான பொதுவான தலைப்பு! ‘இதில்

என்ன பேசிவிட போகிறார்கள் புதிதாய்!’ என்று எண்ணுவோரின் கவனத்திறகே இந்த

பதிவு.

x

 இதோ இந்த பேச்சாளர்கள், ஒவ்வொருவரும், கருத்துரையை கேட்டவர் அனைவர் மனங்களையும், தங்கள் பேச்சால் அசைத்து விட்டு சென்றனர் எனலாம். ஒருவர் தான் அறிந்ததை பேசுவதற்கும், ஒருவர் தான் அனுபவித்ததை சமூக பார்வையோடு சேர்ந்து பேசுவதற்கும் வேறுபாடு உள்ளது.  சாதிய சமூக பார்வையால் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை (அவமானங்களை), ஒவ்வொருவரும் பேசும் போது, அவர்களின் கோபம்,  ஒரு சமூகத்தின் கோபமாய் கேட்போர் மனதில் நீங்கா ஒரு வலியை உணர வைக்கிறது என்பதை இந்த கருத்துரை எப்படி என்னை வெகுவாக பாதித்தது என்பதை கொண்டு உணர முடிகிறது. 


பொதுவாக, பெரும்பாலும் திருமண  அல்லது இல்ல விசேஷ அழைப்பிதழ்களில் தங்கள் பெயர்களின் பின்னால் சாதி பெயரை போட்டு கொள்வதுண்டு. நாங்கள் இந்த சாதியை சேர்ந்தவர்கள் என்று பெருமையாக சொல்லி கொள்வதாய் எனக்குப்பட்டதுண்டு. பேச்சாளர்கள் தங்களை இழிவுப்படுத்தும் நோக்கத்துடன் தனது சாதி பெயரை பொதுவெளியில்  பிறர் உச்சரித்து சுட்டும் போது, ஏற்படும் வலி, கோப கனலாய் அவர்களின் பேச்சில்  கொப்பளைப்பதை உணர முடிகிறது. கவிஞர் சுகிர்தராணி கூறும் போது, தான் சமூகத்தில் நல்ல நிலையில் இருந்தாலும், அவர் ஊரில்  ‘நீ சேரி சுப்ரமணியனின் பெண் தானே’  என்று தன்னை அடையாளம் அறிவதை கூறும் போதும், அதே போன்ற அனுபவத்தை சாலின் தோழரும் பகிர்ந்தார். அவரின் கல்லூரி காலத்தில், ‘நீ சேரி பொண்ணு தானே’ என்று கூறியதால், தான் தாழ்வு மனப்பான்மையால் ரொம்ப பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டார். இதையெல்லாம் கேட்கும் போது, எவ்வளவு சாதிய அழுக்குகளை நம் சமூகம் சுமந்து கொண்டுள்ளது என்பதை நம்மால் உணர முடிகிறது.


ஊடகத்தை பற்றி குறிப்படும் போது, பாலினம் என்பதையும் தாண்டி சாதிய பாகுபாடு எவ்வாறு அங்கு வேரூண்டி உள்ளது என்பதை அறிய முடிந்தது. தலித்திய செய்திகளை கொணர்வதற்கு, தலித்தான தன்னை தேர்ந்தெடுத்ததாக தோழர் பிரியதர்ஷிணி குறிப்பிட்டார்.  திறமை மிக்க அவர் பிற செய்திகளை கையாள்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட வில்லை என்பது மிகவும் வருத்தப்படக் கூடிய விஷயமே! தோழர் கவின் மலர் குறிப்பிடும் போது, ஊடகத்தில் பெண் என்றால் சமையல் குறிப்பு போன்ற assignment தான் கொடுப்பார்கள். எடுத்துக்காட்டாக ஒரு பெண் நிருபர், ஒரு தலித் பஞ்சாயத்து தலைவர் அவமதிக்கப்பட்டு, கொலை மிரட்டலுக்கு உள்ளாக்கப்பட்டதை ஒரு செய்தியாக கொணர்ந்த போது, அதை எடுத்துக் கொள்ளாமல், ‘நீங்கள் சமையல் குறிப்பு எழுதி கொண்டு வாருங்கள்’ என்று அவமதிக்கப்பட்டார். இது போன்ற பாலினம் மீதான சாதிய வன்மம் தவிர்க்க இயலாது, ஊடகம் எங்கும் நிரம்பி வழிவதை பல்வேறு நிகழ்வுகளை கொண்டு விளக்கும் போது, அந்த நிதர்சனம் நெத்தி பொட்டில் அறைந்தது போன்று இருந்தது. 


பாலியல் வன்முறை என்பது எல்லா பெண்களுக்கும் ஒரே மாதிரியான நிகழ்வாய் இருப்பதில்லை என்பதும் நமது பேச்சாளர்கள் அனைவரும் சுட்டி காட்டிய உண்மை. தலித் பெண் என்றால், அவள் உடல் மீது அதீத வன்முறையை நிகழ்த்தி இந்த சமூகம் தனது சாதிய கோர முகத்தை காண்பிக்கின்றது. ஆசிபாவில் தொடங்கி, நம்மூர் நந்தினி வரை அனைத்து தலித் பெண்களுக்கும் இது நிகழ்ந்துள்ளது. ஹத்ராஸ் வன்புணர்வின் சாதிய கொடூரத்தை பற்றி பேசினால், ‘இது எல்லா பெண்களுக்கும் நிகழும் பாலிய பிரச்சனை தானே! அதற்கு ஏன் சாதிய பூச்சு பூசுகிறீர்கள்?’ என்றே பலரின் நிலைப்பாடாக இருக்கிறது. தலித் பெண் வன்புணர்வு செய்யப்பட்டால், அவளின் சாதிய அடையாளத்தை ஊடகம் வெளியிடுவதை  மிகவும் இயல்பானதாக கொண்டுள்ளது.  சிலர், தன்னுடைய தலித்திய அடையாளத்தை வெளிப்படுத்துவதுக்கு கூட தயங்குவதும் இங்கு குறிப்பிடத்தக்கதாக நமது பேச்சாளர்கள் குறிப்பிட்டார்கள். பெண்கள் என்றாலே வெளிர் நிறத்தில் இருப்பவர்களுக்கே வாய்ப்புகள், காட்சி ஊடகத்தில் கிட்டும் என்று ஊடக அரசியலை நம் முன் படம் பிடித்து காட்டினர் நமது பேச்சாளர்கள். 


அரசாங்க அமைப்பு மட்டுமல்லாது, இதர அமைப்புகளிலும் தலித்திய பிரநித்துவம் மிகவும் குறைவு என்பதும் நாம் ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயம். முடிவுகளை எடுக்க கூடிய பதவிகளிலும் தலித் பிரதிநிதத்துவம் குறைந்தே காணப்படுகிறது. அனைத்து பேச்சாளர்களும் கூறிய விசயம் என்னவென்றால், தலித்திய பிரதிநிதத்துவத்தை அனைத்து துறையிலும் அதிகரிக்க வேண்டும், என்பதும் பாகுபாடற்ற சூழலை உருவாக்க கூடிய ஒரு நிலைப்பாடாவே பார்க்க வேண்டியதுள்ளது.  


தனது வலி, அனைத்து தலித் பெண்களுக்குமான வலி அதனை இலக்கியமாக வெளிப்படுத்துவது, தலித் பெண்களின் வலியினை உலகுக்கு தெரியப்படுத்துவதே என்று தலித் இலக்கியத்தை பரவலாக்கி, அனைவரையும் அரசியல்படுத்த வேண்டும் என்று தோழர் சுகிர்தராணி கூறியது முற்றிலுமான உண்மை. இந்த வலியை ஏற்படுத்துவர்களை பற்றியும்,ஏன் இவ்வாறு நடக்கிறார்கள் என்பதை தலித் அல்லாத ஏனையோர் எழுதுவது அவசியம் என்றும் கவின் தோழர் குறிப்பட்டது, அவர்களின் வலியில் இருந்து பார்க்கும் போது சரியென்றே தோன்றுகிறது.


அனைத்து பேச்சாளர்கள் கூறியது போல, அனைவரையும் இந்த விசயத்தில் அரசியல்படுத்த வேண்டும் என்பதே இதற்கான தீர்வாக இருக்க முடியும். இதையெல்லாம் தாண்டி, தலித்தை தீண்டாத இந்த சமூகம், ஏன் தலித்தின் உடலை மட்டும் வன்புணர்ந்து, தீண்டுகிறது. ’அப்பொழுது எங்கே போனது இந்த சாதிய தீண்டாமை?’ என்று கருத்துரையில் பேச்சாளர் கேட்ட கேள்வி மனதில் தொக்கி, என்னை உணர்வு பிழம்பாக்குகிறது என்பதை மறுக்க இயலவில்லை.

No comments:

Post a Comment